திருவுள பணியாளர் சபை குருவும் கண்டி தேசிய குருத்துவ கல்லூரி மெய்யியல் கற்கைநெறி விரிவுரையாளருமான அருட்தந்தை டெவின் கூஞ்ஞ அவர்களின் Rationality for God’s Existence நூல் அறிமுக நிகழ்வு கடந்த 29ஆம் திகதி சனிக்கிழமை கொழும்புத்துறை வசந்தகம் டி மசனெட் இறையியலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து நூலை அறிமுகம் செய்துவைக்க நூலுக்கான ஆய்வுரைகளை யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் மற்றும் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை தேவராஜா ரவிராஜ் ஆகியோர் வழங்கியிருந்தனர்.
இந்நிகழ்வில் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன், திருவுளப்பணியாளர் சபை இலங்கை மாகாண முதல்வர் அருட்தந்தை கொட்வின் கமிலஸ் சணா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை சத்தியசீலன் மற்றும் புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி துணை அதிபர் அருட்தந்தை ஜெராட் சவிரிமுத்து ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டதுடன் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், குருமட மாணவர்களென பலரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
கடவுளின் இருப்பை தர்க்கரீதியாக நிறுவுவது தொடர்பில் மத்தியகாலப் பகுதியில் வாழ்ந்த மேலைநாட்டு அறிஞர்களான அன்சலம், அக்குவைனஸ் மற்றும் இந்திய அறிஞரான உதயன- ஆச்சாரியார் ஆகியோர் முன்வைத்துள்ள கருத்துக்களை ஒப்பிட்டுக் காட்டும் இந்நூல் மெய்யியல் மற்றும் இறையியல் கற்கும் மாணவ மாணவியர்க்கு பயனுள்ளதாக அமைந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.