யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறை மற்றும் பொது வெளி இறையியலுக்கான ஆசிய வலைப்பின்னல் இணைந்து முன்னெடுத்த இரண்டாவது சர்வதேச கிறிஸ்தவ ஆய்வு மாநாடு கடந்த 01ஆம் 02ஆம் திகதிகளில் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறை தலைவர் பேராசிரியர் அருட்தந்தை போல் றொகான் அவர்களின் தலைமையில் ‘சவால் மிக்க காலங்களில் சமயங்களின் பங்கு’ என்னும் கருப்பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகள் 01ஆம் திகதி வியாழக்கிழமை கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றன.
இவ் ஆரம்ப நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெரனான்டோ, யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராஜா, பொல்ஜியம் நாட்டிலிருந்து வருகைதந்த பேராசிரியர் றுடோல்ப் வொண்சினர், இந்தியாவிலிருந்து வருகைதந்த ஆசிய பொதுவெளி இறையியல் வலைப்பின்னல் இணைப்பாளர் பேராசிரியர் அருட்தந்தை ஞானப்பற்றிக், கனடா ரொறென்றோ பல்கலைக்கழக பேராசிரியர் அருட்தந்தை சந்திரகாந்தன், யாழ். பல்கலைக்கழக உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் கண்ணதாசன், பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் முவேட்டகம ஞானாநந்த தேரர், யாழ். மாவட்ட சர்வமத பேரவை தலைவர் சிவஸ்ரீ கிருபானந்த குருக்கள், யாழ். மாவட்ட சர்வமத பேரவை அங்கத்தவர் மௌலவி சாய்க் சுபியான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.
ஆரம்ப நிகழ்வில் விருந்தினர்களின் உரைகளும் அவர்களுக்கான நினைவுச்சின்னங்கள் வழங்கலும் தொடர்ந்து யாழ். திருமறைக்கலாமன்ற கலைஞர்களினால் கலைநிகழ்வுகளும் ஆற்றுகை செய்யப்பட்டதுடன் சிறப்பு நிகழ்வாக திருமறைக்கலாமன்ற தயாரிப்பான செம்பாத்தா கூத்துருவ நாடகமும் மேடையேற்றப்பெற்று பலரது பாராட்டினையும் பெற்றுக்கொண்டது.
தொடர்ந்து ஆய்வு மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் யாழ். பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் 75 வரையான ஆய்வாளர்கள் பங்குபற்றி ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்ததுடன் மாநாட்டின் இறுதியில் கட்டுரைகளை சமர்ப்பித்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் மாநாட்டு முன்மொழிவுகள் பிரகடனம் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றன.