யாழ். கியூடெக் கரித்தாஸ் நிறுவன சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்தின்கீழ் மண்டைதீவு பிரதேசத்தில் புனரமைப்பு செய்யப்பட்டுவந்த குளத்துருசு வான்கதவு கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ளநிலையில் அதன் திறப்பு விழா 07ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிறுவன இயக்குனர் அருட்தந்தை யூஜின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மாவட்ட செயலர் திரு. சிவபாலசுந்தரம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டதுடன் வேலணை பிரதேச செயலர் திரு.சிவகரன், யாழ். மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள பிரதம பொறியியலாளர் திரு. சுஜீவன் ஆகியோர் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் குளக்கட்டை அண்மித்த பிரதேசங்களில் பயன்தரு மரங்களும் நாட்டிவைக்கப்பட்டதுடன் தொடர்ந்து விழிப்புணர்வு கருத்தரங்கும் பொங்கல் நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் எனப்பலர் கலந்து பயனடைந்தனர்.
பல ஆண்டுகளாக துருசு திருத்தப்படாத காரணத்தினால் அப்பிரதேச மக்கள் வாழ்வாதார ரீதியாக எதிர்கொண்ட பிரச்சனைகளை சுட்டிக்காட்டி விவசாய சம்மேளனம் மேற்கொண்ட கோரிக்கைக்கமைவாக வேலணை பிரதேச செயலகத்தின் வேண்டுகோளுக்கிணங்க இப்புனரமைப்பு பணி முன்னெடுக்கபட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.