அவுஸ்திரேலியாவை தளமாக கொண்ட யாழ். பல்கலைக்கழக பழைய மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களால் நடாத்தப்படும் e – கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான அக அமைதி பயிற்சி பட்டறை நிகழ்வு 4ஆம் 5ஆம் திகதிகளில் மொனராகலை விபுலானந்த தமிழ் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
e-கல்வி நிறுவனத்தின் இலங்கைக்கான இணைப்பாளர் அருட்சகோதரி சிறிய புஸ்பம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மொனரானலை விபுலானந்த தமிழ் மகாவித்தியால அதிபர் திரு. ஜோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை வலயக்கல்வி பணிப்பாளரும் லம்பொதர அக விழிப்புணர்வு வாழ்வு நிறுவன இயக்குநருமான திரு. ரவி, பெரிய வட்டவான் கண்ணகி வித்தியாலய அதிபர் திரு.சிவானந்தம், திரு. விஸ்வஜிந்தன், திரு. தயாகரன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து மாணவர்களை நெறிப்படுத்தினர்.
பாடசாலையின் e – கல்வி இணைப்பாளர் திரு.குணம் அவர்களின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் e – கல்வி நிறுவனத்தின் செயலாளர் திரு. இளங்கோ அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் 110 வரையான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக பழைய மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களால் நடாத்தப்படும் e – கல்வி நிறுவனம் அவுஸ்ரேலியாவில் இயங்கி வருவதுடன் வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய இடங்களிலுள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பெரிதும் பங்காற்றி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.