முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட தேசிய பொதுநிலையினர் மற்றும் முல்லைத்தீவு மறைக்கோட்ட பொதுநிலையினர் எழுச்சி நாள் நிகழ்வுகள் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றன.
முல்லைத்தீவு மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குனர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக தலைவர் திரு. சூசைமுத்து அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளின் ஆரம்பத்தில் முல்லைத்தீவு மறைக்கோட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்க அங்குரர்ப்பணமும் பொதுநிலையினர் கழகத்தால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கலும் இடம்பெற்றன.
தொடர்ந்து யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குனர் அருட்தந்தை மௌலிஸ் அவர்களின் தலைமையில் சிறப்பு திருப்பலியும் திருப்பலி நிறைவில் அந்நாளை சிறப்பிக்கும் முகமாக ஆலய வளாகத்தில் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குனர் அருட்தந்தை மௌலிஸ் அவர்கள் பிரதம விருந்தினராகவும் ஓய்வுநிலை அதிபர் திரு. அல்பிரட் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், அமைதித்தென்றல் இயக்குனர் அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை அன்ரனி பொன்சியன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்ததுடன் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், மறைமாவட்ட பொதுநிலையினர் கழக பிரதிநிதிகள், முல்லைத்தீவு மறைக்கோட்ட கத்தோலிக்க ஆசிரியர்கள் மற்றும் இறைமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.