மன்னார் மருதமடு அன்னை திருத்தல ஆடிமாத திருவிழா 02ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் சிறப்பானமுறையில் நடைபெற்றது.
திருநாள் திருப்பலியை கொழும்பு உயர்மறை மாவட்ட துணைஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். தமிழ் ,சிங்கள மொழிகளில் திருநாள் திருப்பலி நடைபெற்றது.
கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி மன்னார் ஆயர் தலைமையில் இடம்பெற்ற கொடியேற்றத்தினைத் தொடர்ந்து திருவிழாவுக்கான ஆயத்தநாள் வழிபாடுகள்ஆரம்பமாகி அங்கு நடைபெற்றுவந்தன.
திருநாள் திருப்பலியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதர,சகோதரிகள், திணைக்கள தலைவர்கள் உட்பட 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பலியின் நிறைவில் ஆயர் அவர்களினால் அன்னையின் சுருப ஆசீர் வழங்கப்பட்டது.
அத்துடன் 1924ஆம் ஆண்டு ஆடி 2ஆம் திகதி மருதமடு திருப்பதியில் ஆயர்கள் சூழ மருதமடு அன்னைக்கு முடிசூட்டு விழா இடம்பெற்றது. இந்நிகழ்வின் நூற்றாண்டு யூபிலி பெருவிழாவாக எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொண்டாடப்படவுள்ள விழா அமைந்துள்ளநிலையில் இதனை சிறப்பிக்கும் நிகழ்வும் அங்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் யூபிலி நூற்றாண்டு விழாவினை பிரகடனம் செய்து வைத்ததுடன் அதனை அடையாளப்படுத்துமுகமாக வருடம் முழுவதும் பறக்க விடப்படுகின்ற யூபிலி கொடி மருதமடு ஆலய முன் மண்டபத்தில் ஏற்றி வைக்கப்பட்டது. இறுதியில் திருச்செபமாலை வடிவில் பலூன்கள் பறக்கவிடப்பட்டன.