யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் உள்ள புனித வின்சென்ற் டி போல் சபையினர் முன்னெடுத்த தவக்கால யாத்திரை 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
பருத்தித்துறை மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள தும்பளை புனித லூர்து அன்னை திருத்தலத்திற்கு யாத்திரையாக சென்ற இவர்கள் தியான உரை, திருச்செபமாலை, சிலுவைப்பாதை தியானம், திருப்பலி, நற்கருணை ஆராதனை மற்றும் ஒப்புரவு அருட்சாதனம் ஆகியவற்றில் பங்குபற்றினார்கள். தியான உரையை கரவெட்டி பங்குத்தந்தை அருட்திரு யஸ்ரின் அவர்கள் வழங்கினார். நற்கருணை ஆராதனையை அருட்திரு ஜேம்ஸ் நாதன் அவர்கள் வழிநடத்தினார். அத்துடன் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி திருப்பலி ஒப்புக்கொடுத்தார். ஆயர் அவர்கள் திருப்பலி மறையுரையில் தவக்காலத்தில் செபம், தபம், தர்மம் ஆகிய மூன்று வழிகளிலும் நன்மை செய்ய திருச்சபை நம்மை அழைக்கின்றது என்பதனை குறிப்பிட்டு மனிதர்களாகிய எமக்கு இது நன்மை செய்யும் காலம் என்பதனை சுட்டிச்சாட்டி இக்காலத்தில் பிறருக்காக செபித்து, எம்மை ஒறுத்து, பிறருக்கு நன்மை செய்வதனூடாக மற்றவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அழைப்புவிடுத்தார். திருப்பலியை தொடகுந்து சிறுவர் பந்தியினரை ஆயர் சந்தித்து உரையாடினார். புனித வின்சென்ற் டி போல் மத்திய சபையின் ஆன்ம ஆலோசகர் அருட்திரு நேசநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலிலும் பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு பெனற் அவர்களின் உதவியுடனும் நடைபெற்ற இத்தவக்கால யாத்திரைறில் யாழ் மறைமாவட்டத்திலுள்ள 37 பந்தியிலிருந்து 150 இற்கு மேற்பட்ட அங்கத்தவர்கள் பங்குபற்றினர்கள்.