திருஅவையின் உறுப்பினர்களில் ஒருசிலர் செய்த தவறுகளால், திருஅவை என்ற படகு, தற்போது மிக வலுவான எதிர்காற்றைச் சந்தித்து வருகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னைச் சந்திக்க வந்திருந்த பிரான்ஸ் நாட்டு அருள்பணியாளர்களிடம் கூறினார்.
பிரான்ஸ் நாட்டின் Créteil மறைமாவட்டத்தைச் சேர்ந்த 100க்கும் அதிகமான அருள்பணியாளர்களை, அக்டோபர் 1ம் தேதி, திங்களன்று, வத்திக்கான், கிளமெந்தீனா அரங்கத்தில் சந்தித்தத் திருத்தந்தை, தன்னைச் சந்திக்க வந்திருந்த அம்மறைமாவட்ட ஆயர் Santier, மற்றும் அருள்பணியாளர்கள் வழியே, Créteil மறைமாவட்ட மக்கள் அனைவருக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அருள்பணியாளராக அழைக்கப்பட்ட அனைவரும், அனைத்து சக்தியும் பெற்ற ‘சூப்பர்’ நாயகர்களாக செயலாற்ற அழைக்கப்படவில்லை, மாறாக, காயமுற்று, இறந்து, உயிர்த்த இயேசுவின் சாட்சிகளாக வாழ அழைக்கப்பட்டுள்ளனர் என்று, திருத்தந்தை தன் உரையில் குறிப்பிட்டார்.
அடுத்துவரும் சில நாட்கள், இம்மறைமாவட்ட பிரதிநிதிகள் உரோம் நகரில் தங்கி, தங்கள் மேய்ப்புப்பணி குறித்த ஆலோசனைகளை மேற்கொள்ளும் வேளையில், தங்கள் சொல் வல்லமையால் அல்ல, மாறாக, தங்கள் வாழ்வால், அருள்பணியாளர்கள், இளையோரை எவ்விதம் திருஅவை வாழ்வில் இணைவதற்கு ஈர்க்கமுடியும் என்று சிந்திப்பது நல்லது என்று திருத்தந்தை ஆலோசனை வழங்கினார்.
அருள்பணியாளர்களின் வாழ்வில் வெளிப்படும் மகிழ்வு, வறியோர், மற்றும், சிறியோர் மட்டில் அவர்கள் காட்டும் அக்கறை ஆகியவை வழியே, அவர்கள் கிறிஸ்துவின் சீடர்கள் என்ற பணியை திறம்பட ஆற்றமுடியும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மறைமாவட்ட அருள்பணியாளர்களிடம் எடுத்துரைத்தார்.