‘அன்பின் மகிழ்வு’ (Amoris Laetitia) என்ற திருத்தூது அறிவுரை மடல், இரு உலக ஆயர்கள் மாமன்றங்களில் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்களின் விளைவாக உருவான மடல் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொதுநிலையினரும், இறையியலாளருமான Steven Walford என்பவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்தில் வாழும் Walford அவர்கள், ‘அன்பின் மகிழ்வு’ என்ற மடலை மையப்படுத்தி, உருவாக்கியுள்ள ஒரு நூலைக் குறித்து, திருத்தந்தை எழுதியுள்ள இக்கடிதம், அந்நூலின் அணிந்துரையாக வெளிவந்துள்ளது.
“திருத்தந்தை பிரான்சிஸ், குடும்பமும் மணமுறிவும், உண்மைக்கும் இரக்கத்திற்கும் சார்பாக” என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்நூல், ‘அன்பின் மகிழ்வு’ என்ற மடலில் திருத்தந்தை பதிவு செய்துள்ள கருத்துக்களை வலியுறுத்தியுள்ளது.
இன்றைய உலகில் குடும்பங்கள் சந்திக்கும் பிரச்சனைகளானகுழந்தைகளின் கல்வி, திருமண தயாரிப்பு, சவால்களைச் சந்திக்கும் குடும்பம் ஆகிய பல கருத்துக்கள் தன் மடலில் விவாதிக்கப்பட்டுள்ளன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Walford அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜெரோம் லூயிஸ் – வத்திக்கான் செய்திகள்