ஏப்.17,2018. நாம் கடவுளுக்கு சொந்தமானவர்கள் என்ற உறவை பலப்படுத்த உதவும் நோக்கத்துடன் நாம் ஒவ்வொருவரும் இறைவாக்கினர்களாக செயல்படவேண்டியது அவசியம் என மறையுரை நிகழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவார்த்தைக்கு செவிமடுக்காமலும், தங்கள் வரலாற்றைக் குறித்து எண்ணிப்பார்க்காமலும் வாழும் மக்களை நோக்கி புனித ஸ்தேவான் கூறும் வார்த்தைகளை எடுத்துரைக்கும், இந்நாளின் முதல் வாசகத்தை மையமாக வைத்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
முற்காலத்தைய இறைவாக்கினர்களுக்கு நிகழ்ந்ததுபோலவே இங்கும் புனித ஸ்தேவான் மக்களால் கொல்லப்படுவதைக் காண்கிறோம், ஏனெனில் உண்மையை எடுத்துரைக்கும்போது, சில இதயங்கள் அதற்காக தங்களைத் திறக்கின்றன, எனையவோ, கல்லாக இறுகி, கொலைச் செய்யவும் துணிகின்றன என தன் மறையுரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை.
உண்மைகளை எடுத்துரைக்கும்போது, இறைவாக்கினர்கள் எதிர்நோக்குவது சித்ரவதைகளே, என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு, அவர் காலத்து மக்களை கடிந்து கொண்டதையும், எருசலேம் நகருக்காக அழுததையும் குறித்து எடுத்துரைத்தார்.
உண்மையான இறைவாக்கினர் என்பவர் நம்பிக்கையின் மனிதராகச் செயல்படுபவர் என்று தன் மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை, இறைமக்களை முன்னோக்கி அழைத்துச்செல்லும் நோக்கத்தில், இறைவனோடும், மனிதர்களோடும் உறவுகளை பலப்படுத்துபவராக இறைவாக்கினர் செயல்படுகிண்றார் எனவும் கூறினார்.
உண்மைகளை எடுத்துரைக்கவும், மக்களுக்காக செபிக்கவும், கடவுளை உற்று நோக்கவும், மக்கள் தவறு செய்யும்போது அது குறித்து மனம் வருந்தவும், அவர்களுக்காக அழவும் என, இன்று திருஅவைக்கு இறைவாக்கினர்கள் தேவைப்படுகிறார்கள், ஏனெனில் நாம் அனைவரும் முன்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது என தன் மறையுரையில் மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி