பிப்.02,2018. மதத்தின் பெயரால் ஊக்குவிக்கப்படும் மற்றும், நடத்தப்படும் வன்முறை, மதத்தையே மதிப்பிழக்கச் செய்வதாகும் என்றும், இத்தகைய வன்முறைக்கு அனைவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கேட்டுக்கொண்டார்.
மதத்தின் பெயரால் நடத்தப்படும் வன்முறை குறித்த பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொள்ளும் ஐம்பது பிரதிநிதிகளை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.
உலகில் எல்லாரும், குறிப்பாக, கடவுள் எப்போதும் நல்லவர், அன்பானவர், இரக்கமுள்ளவர், அவரில், காழ்ப்புணர்வு, பழிவாங்குதல், வெறுப்பு ஆகியவற்றுக்கு இடமே இல்லை என்பதை அறிந்திருக்கும், உண்மையான மத நம்பிக்கையாளர்கள், மதத்தின் பெயரால் நடத்தப்படும் வன்முறைக்கு எதிராக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று, கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒருவர், தன் பாவங்கள் மற்றும், குற்றங்களையும், தான் செய்யும் கொலை, பெருமெண்ணிக்கைக் கொலைகள், சுரண்டல், தனியாள்களையும், முழு சமுதாயத்தையும் ஒடுக்குதல், சித்ரவதைப்படுத்துதல் ஆகியவற்றையும் நியாயப்படுத்த, கடவுளின் பெயரைப் பயன்படுத்துவது, மிகப்பெரிய தெய்வநிந்தனைகளில் ஒன்றாகும் என்பதை, சமய உணர்வு கொண்டவர்கள் அறிந்திருக்கின்றார்கள் என்றும், திருத்தந்தை கூறினார். தவறான பாதையில் வழிநடத்தும் மத உணர்வுகளிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கு, அரசியல் அதிகாரிகளும், மதத் தலைவர்களும், கல்வித்துறையில் பணியாற்றுகின்றவர்களும் முயற்சிக்குமாறு கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மதத்தின் பெயரால் நடத்தப்படும் வன்முறைச் செயல்களுக்குப் பதிலளிப்பது எப்படி என்பது குறித்து, அரசியல் அதிகாரிகளும், மதத் தலைவர்களும் கலந்துரையாடுவதைப் பாராட்டி, ஊக்குவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி