மல்வம் பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களை இணைந்து முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ சுற்றுலா கடந்த மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் மணற்காடு புனித அந்தோனியார் ஆலயத்தை தரிசித்து மணற்காடு பங்கு மறைக்கல்வி மாணவர்களுடன் இணைந்து அங்கு நடைபெற்ற மகிழ்வூட்டல் நிகழ்வுகளில் பங்குபற்றினர்.
இந்நிகழ்வில் 80 மாணவர்களும் 10 மறையாசிரியர்களும் பங்குபற்றியிருந்தனர்.
அத்துடன் மல்வம் பங்கு இளையோர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானம் 9ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் நடைபெற்றது. இத்தியானத்தில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை றமேஸ் அவர்கள் கலந்து தியான உரை, நற்கருணை ஆராதனை என்பவற்றினூடாக இளையோரை வழிப்படுத்தினார்.
மேலும் பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான தியானம் 13ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை அந்திரான் புனித வேளாங்கன்னி ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இத்தியானத்தை புனித சவேரியார் குருத்துவக் கல்லூரி 4ஆம் ஆண்டு இறையியல் மாணவர்கள் நெறிப்படுத்தினார்கள்.
இத்தியானத்தில் திருவிவிலிய அறிமுக உரை, குழு செயலமர்வு, மற்றும் நற்கருணை ஆராதனை என்பன இடம்பெற்றன. இந்நிகழ்வில் 100ற்கும் அதிகமான மறைக்கல்வி மாணவர்களும் 25வரையான மறையாசிரியர்களும் பங்குபற்றினர்.
