ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு 33 வருடங்கள் தாயக மண்ணிற்காக சிறை தண்டனை அனுபவித்து இறைபதமடைந்த திரு. சுரேந்திரராஜா சாந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றைய தினமாகும். இந்நாளில் அவர் விதைக்கப்பட்ட இடமான எள்ளங்குளம் இந்து மயானத்தில் அவரது குடும்பத்தினரால் ‘சாந்தன் துயிலாயம்’ எனும் பெயரில் அமைக்கப்பட்ட நினைவாலயத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமான முறையில் நடைபெற்றது.
இந்நினைவாலயத்தை அவரது தாயார் திருமதி. தில்லையம்பலம் மகேஸ்வரி அவர்கள் திறந்து அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். தொடர்ந்து பொதுமக்களால் மலரஞ்சலி நிகழ்வும் அங்கு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய வளவாளரான ஈழத்து இயக்குனர் திரு. மதிசுதா அவர்களின் சகோதரன் திரு. சுரேந்திரராஜா சாந்தன் அவர்கள் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின்பேரில் இந்தியா நாட்டில் கைதுசெய்யப்பட்டு 33 வருடகால சிறை தண்டனை அனுபவித்தபின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்ப அனுமதியின்றி தொடர்ந்தும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு நோயுற்று கடந்த வருடம் இதே நாள் இறைவனடி சேர்ந்தார்.
இவரது குடும்பத்தினரின் முயற்சியால் இவர் இந்தியாவிலிருந்து அன்றைய தினம் மாலை நாடு திரும்ப இருந்த நிலையில் அன்றைய தினம் அதிகாலை மாரடைப்பால் மரணத்தை தழுவிக்கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.