உரிமையாளரின் அனுமதியின்றி தையிட்டி பிரதேச தனியார் காணியொன்றில் பௌத்த விகாரை கட்டப்பட்டதை கண்டித்து யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு 17ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இவ்வறிக்கையில் இராணுவம் போர்காலத்தில் கையகப்படுத்திய ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில் அமைந்துள்ள வீடுகள், இந்துக்கோயில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் பலவற்றை இடித்து தரைமட்டமாக்குவதற்கும் ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் காணிகளில் பௌத்த விகாரைகளை அமைக்க பாதுகாப்பு மற்றும் அனுசரணை வழங்குவதற்கும் யார் அதிகாரம் கொடுத்ததென்ற கேள்வி எழுப்பியுள்ளதுடன் இவை கடந்த அரசுகளில் நடந்த விடயங்களாயினும், அண்மையில் புதிய ஜனாதிபதி மக்களுடைய காணிகள் மக்களுக்கே வழங்கப்படும் என்று வழங்கிய வாக்குறுதியின்படி மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்படுமா என்ற ஐயப்பாட்டினையும் வெளிப்படுத்தியுள்ளது.

அத்துடன் நீதிமன்ற தீர்ப்புக்களை மதிக்காது இராணுவத்தின் அனுசரணையில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறுவதால் தையிட்டி விகாரை விவகாரத்தில் காணி உரிமையாளர்களுக்கு நீதி கிடைப்பது சந்தேகமனெ குறிப்பிட்டு நீதிமன்ற தீர்ப்புக்களை பாதுகாப்பு படையினர் உட்பட எல்லா மக்களுக்கும் எல்லா இடங்களிலும் மதித்து நடப்பது இவ்வாறான பிரச்சினைகளை தீர்க்க சாத்தியப்பாடன வழிமுறையாக கருதுவதாகவும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கு கிழக்கில் போர் முடிவடைந்து 16 வருடங்களாகியும் இன்னமும் பெருமளவில் நிலைகொண்டிருக்கும் பாதுகாப்பு படையினர் அங்குள்ள மக்களின் பாதுகாப்பையும் அடிப்படை மனித உரிமைகளையும் மதித்து செயற்படும் போது அது அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கேற்ற களநிலையை உருவாக்குமெனவும் மேலும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்படுள்ளது.

By admin