இலங்கை தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் புதிய தலைவராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள திரு. விஜித் அவர்கள் தலைமையிலான குழுவினர் யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டு பலதரப்பினரையும் சந்தித்து கலந்தரையாடியுள்ள நிலையில் 16ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட குருக்கள்இ துறவிகள் மற்றும் பொதுநிலையினரை சந்தித்துள்ளனர்.
யாழ். பற்றிக்ஸ் வீதியில் அமைந்துள்ள அகவொளி குடும்ப நல நிலையத்தில் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இச்சந்திப்பில் திரு. விஜித் அவர்களுடனான குழுவினர் நல்லிணக்கம் சம்மந்தமாக தாம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து வட மாகாணத்தில் நிலவும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கெதிரான செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களால் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நல்லிணக்கம் தொடர்பாகவும் தமிழர் பிரதேசத்தில் நல்லிணக்கத்திற்கெதிராக நடைபெறும் செயற்பாடுகள் தொடர்பாகவும் எடுத்துரைத்தார்.
இச்சந்திப்பில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம், தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை றெக்னோ உட்பட பல குருக்கள் துறவிகள், ஏனைய கிறிஸ்தவ சபை அருட்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினர் கலந்து தங்கள் கருத்துக்களையும் சந்தேகங்களையும் வெளிப்படுத்தினார்கள்.