யாழ். மறைமாவட்ட குருவும் பிரமந்தனாறு புன்னைநீராவி ஆங்கில வளாகத்தின் நிறுவுனருமாகிய அமரர் அருட்தந்தை எட்வின் சவுந்தரா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வு 13ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை தர்மபுரம் பங்கில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன் கொலின் அவர்களின் தலைமையில் புன்னைநீராவி ஆங்கில வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் அருட்தந்தையின் நினைவாக குடும்பத்தினரால் அமைக்கப்பட்ட நினைவுக்கல்லும் பங்குத்தந்தை அவர்களால் ஆசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டது.
அமரர் அருட்திரு எட்வின் சவுந்தரா அவர்கள் புனித சவேரியார் குருத்துவக்கல்லூரியில் பல ஆண்டுகள் விரிவுரையாளராக பணியாற்றியதுடன் 1995ற்கு பிற்பட்ட காலப்பகுதியில் வெளிநாட்டுக்கு புலம் பெயர்ந்து அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மறைமாவட்டத்தில் இணைந்து அங்கும் கற்பித்தல் பணியில் தன்னை இணைத்துக்கொண்டவர்.
புலம்பெயர் தேசத்திலிருந்து நாடு திரும்பி வன்னிப் பிரதேசத்திலுள்ள வறிய மாணவர்களின் ஆங்கிலக் கல்வியை மேம்படுத்தும் நோக்கோடு தனது முயற்சியினால் பிரமந்தனாறு புன்னைநீராவி பிரதேசத்தில் ஆங்கிலக் கல்விக்கூடம் ஒன்றை நிறுவி ஆங்கிலக் கல்வியை கற்பித்து வந்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.