யாழ். திருமறைக்கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் நிகழ்வுகள் 14ஆம் 18ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன.
14ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள மன்ற அலுவலகத்தில் பொங்கல் நிகழ்வும் தொடர்ந்து மாட்டீன் வீதியில் அமைந்துள்ள கலைஞானசுரபி தியான இல்லத்தில் கிளரேசியன் சபை அருட்தந்தை அருள்ராஜ் அவர்களின் தலைமையில் பண்பாட்டு திருப்பலியும் இடம்பெற்றன.
தொடர்ந்து 18ஆம் திகதி சனிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் பொங்கல்விழா கலைநிகழ்வுகள் நடைபெற்றன.
மன்ற பிரதி இயக்குநர் திரு. ஜோன்சன் ராஜ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைத்தூது அழகியல் கல்லூரி மாணவிகளின் கிராமிய நடனம், நாடக பயிலக மாணவர்களின் ஒயிலாட்டம், “சமுக ஊடகங்கள் இன்று மக்களை அறிவுடையோராக்குகின்றன, அடிமைப்படுத்துகின்றன” என்னும் தலைப்பில் பட்டிமன்றம் மற்றும் அல்லி அர்ச்சுனா இசைநாடக பிரதியை அடிப்படையாகக் கொண்ட “பவளத்தேர்” இசைநாடகமும் திருமறைக்கலாமன்ற கலைஞர்களால் மேடையேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் திரு. வேல்நம்பி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.