திருஅவை வரலாற்றில் முதன்முறையாக பெண் துறவறத்தார் ஒருவர் திருப்பீடத்துறை ஒன்றின் தலைவராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமனம் பெற்றுள்ளார்.

கொன்சலாத்தா மறைப்பணி துறவுசபையைச் சேர்ந்த இத்தாலிய பெண்துறவி Simona Brambilla  அவர்களை, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு நிறுவனங்கள் மற்றும் அப்போஸ்தலிக்க வாழ்வு அமைப்புக்களுக்கான திருப்பீடத்துறையின் தலைவராக திருத்தந்தை அவர்கள் நியமித்ததோடு, கர்தினால் Ángel Fernández Artime அவர்களையும் அதே துறையின் இணைத்தலைவராக நியமித்துள்ளார்.

2011ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டுவரை கொன்சலாத்தா துறவுசபையின் தலைவியாகச் செயல்பட்ட அருட்சகோதரி Brambilla அவர்கள், 2023ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்திலிருந்து அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு நிறுவனங்கள் மற்றும் அப்போஸ்தலிக்க வாழ்வு அமைப்புக்களுக்கான திருப்பீடத்துறையின் செயலராகவும் பணியாற்றியுள்ளார்.

ஒரு திருப்பீடத்துறையின் செயலராக நியமிக்கப்பட்ட இரண்டாவது பெண்துறவியான இவர், திருஅவையில் ஒரு திருப்பீடத்துறையின் தலைவராக நியமிக்கப்படும் முதல் பெண்துறவியகவும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையின் இவ்வுலக தலைமைப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2013ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டுவரையுள்ள காலப்பகுதியில் திருஅவையின் திருப்பீடத்துறைகளில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin