பூநகரி கௌதாரிமுனை கடற்கரையில் வன்னி கரிதாஸ் கியூடெக் நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுவந்த வாடிக்கான கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்பு விழா 15ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கௌதாரிமுனை புனித அந்தோனியார் ஆலய கடற்தொழிலாளர்களின் தொழில் உபகரணங்களை பத்திரப்படுத்தி அவர்களின் தொழிலை இலகுபடுத்தும் நோக்கில் கௌதாரிமுனையில் இயங்கிவரும் வாழ்வாதார கடன்திட்ட குழுவின் உதவியுடன் அமைக்கப்பட்ட இக்கட்டடத்தை நிறுவன இயக்குனர் அருட்தந்தை செபஜீவன் அவர்கள் ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.
தொடர்ந்து அங்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் புனித அந்தோனியார் திருச்சொருபம் ஆசீர்வதிக்கப்பட்டு கடலில் பவனியாக எடுத்துவரப்பட்டது.
பவனி நிறைவில் பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களால் அச்சொருபம் கடற்கரை வளாகத்தில் நிறுவப்பட்டதுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை பங்குமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் பொருட்டு ஒரு தொகுதி பயன்தரு மரக்கன்றுகளும் கடற்கரையில் நாட்டிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் வன்னி கரிதாஸ் கியூடெக் நிறுவன நிர்வாக உத்தியோகத்தர் திருமதி நேசநந்தினி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அத்துடன் விசேடதேவையுடைய பிள்ளைகளுள்ள குடும்பங்களின் வாழ்வாததாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் வாழ்வாதார சுழற்சி முறை கடன் உதவி வழங்கும் நிகழ்வு 12ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி கியூடெக் நிறுவனத்தில் நடைபெற்றது.
நிறுவன இயக்குனர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உடையார்கட்டு ஒளிரும் வாழ்வு நிறுவன பிள்ளைகள் உட்பட 15 விசேட தேவையுடைய பிள்ளைகளின் பெற்றோருக்கு 50000 ரூபா கடனுதவி வழங்கிவைக்கப்பட்டது.