திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் ஏற்பாட்டில் சித்திரப்பாடத்தையும் ஏனைய நுண்கலைப்பாடங்களையும் பயிலும் மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் நோக்கோடு வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டுவரும் சித்திரமுத்திரைகள் ஓவிய கைவினைப் பொருட்களின் கண்காட்சி 18,19,20,21ஆம் திகதிகளில் யாழ். டேவிட் வீதியில் அமைந்துள்ள கலைத்தூது அழகியல் கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் திருமதி. அஞ்சலா அல்போன்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் திருமறைக்கலாமன்றத்தின் ஊடக, வெளியீட்டுப் பிரிவின் இணைப்பாளர் செல்மர் எமில் அவர்களின் தலைமையில் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆரம்பநிகழ்வில் இக்கல்லூரியின் ஆரம்பகால சித்திரப்பாட ஆசிரியர்களில் ஒருவரான திருமதி. ஜெயராணி அம்பலவாணர் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கண்காட்சியை ஆரம்பித்துவைத்தார்.

இந்நிகழ்வில் மாணவர்கள், ஓவிய பாட ஆசிரியர்கள், ஆர்வலர்கள், திருமறைக்கலாமன்ற அங்கத்தவர்கள், ஆதரவாளர்களென பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

கலைத்தூது அழகியல் கல்லூரியில் சித்திரப் பாடத்தைப் பயில்கின்ற மாணவர்களதும் அயல் பாடசாலைகளில் பயில்கின்ற மாணவர்களதும் ஆக்கங்களைக் கொண்டமைந்த இக்கண்காட்சிக்கான அனுசரணையை திருமறைக்கலாமன்ற மூத்த அங்கத்தவர் கலாபூஸணம் அமரர் யோசேப் அவர்களின் குடும்பத்தினர் வழங்கியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அத்துடன் யாழ்ப்பாணம் றக்கா வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலாமுற்றத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் தின நிகழ்வு கடந்த 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மன்ற பிரதி இயக்குநர் திரு. யோண்சன் ராஜ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியில் நுண்கலைப் பாடங்களைப் பயில்கின்ற சிறார்களின் கலைநிகழ்வுகளும் பரிசளிப்பும் இடம்பெற்றன.

யாழ் .போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி திரு. பிரகாசன் அவர்கள் பிரதம விருந்தினராகவும்; தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை வைத்திய அதிகாரி திருமதி. கிறிஸ்ரா நிசாந்தினி அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், திருமறைக்கலாமன்ற அங்கத்தவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin