இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களை, நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலயத்தில் சந்தித்து கலந்துரையாடி உயிரிழந்தோரின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார்.
கடந்த 09ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பின் போது 16 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 258 பேர் கொல்லப்பட்ட இத்துயரமான நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்று கூறிய ஜனாதிபதி அவர்கள், இது தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு, இவ்வாறான துயரச்சம்பவங்கள் நாட்டில் மீண்டும் நடைபெறாதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வலியுறுத்தினார்.
நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தீர்மானத்தில் ஆதிக்கம் செலுத்திய முக்கிய காரணிகளில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ஒன்றாகுமென தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், தாக்குதல் தொடர்பாக மக்கள் தேடும் நீதி மற்றும் நியாயத்தை வழங்குவதே தனது குறிக்கோள் என கூறியதுடன் அதற்கான முயற்சிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன என்றும் நம்பிக்கையைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய கொழும்பு உயர் மறைமாவட்டப் பேராயர், மல்கம் கர்தினால் ரஞ்சித் அவர்கள், 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தருமாறு ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவைக்கு வேண்டுகோள் விடுத்தபோதிலும், எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லை என்பதை வலியுறுத்தியதுடன் இச்செயற்பாட்டில் ஜனாதிபதி அவர்களுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்திய பேராயர், இலங்கை மக்கள், புதிய அதிபர் மீதும் அவருடைய நேர்மையின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையையும் சுட்டிக்காட்டி உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்களை பொறுப்பேற்கவைத்து நீதி வழங்குவதாக ஜனாதிபதி அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.