யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் கத்தோலிக்க மாணவர் ஒன்றியத்தின் பொன்விழா நிகழ்வுகள் யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறையின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லாயன் ஆன்மீகப் பணியகத்தில் நடைபெற்றது.

1974 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி அப்போதைய பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை யாழ்ப்பாண வளாகமாக வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.

உடனடியாக அதே ஆண்டில் கத்தோலிக்க மாணவர் ஒன்றியமும் யாழ்ப்பாண வளாகத்தில் நிறுவப்பட்டது. இவ்விரு நிறுவனங்களின் ஐம்பது வருடகால அர்ப்பணிப்பான சேவையை சிறப்பிக்குமுகமாக இப்பொன்விழா சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

நல்லாயன் ஆன்மீகப் பணியகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கத்தோலிக்க மாணவர் ஒன்றியத்தின் முதலாவது ஆன்மீக வழிகாட்டியாக பணியாற்றிய அருட்தந்தை ஜெயசீலன் அவர்களின் தலைமையில் காலைத் திருப்பலியும் தொடர்ந்து 1974 இல் நிறுவப்பட்ட கத்தோலிக்க மாணவர் ஒன்றியத்தின் முதலாவது மாணவத்தலைவராக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டவரும், 1983ஆம் ஆண்டு ஆடி மாதம் 23ஆம் திகதி சிறிலங்காப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவருமான திரு. அந்திரேஸ்பிள்ளை விமலதாசன் அவர்களின் நினைவுபகிர்வும் இடம்பெற்றன.

வழிபாடுகளைத் தொடர்ந்து, நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா அவர்கள் ஆன்மீக உரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கத்தோலிக்க மாணவர் ஒன்றித்தின் ஐம்பதாண்டு வரலாறு மற்றும் பல்கலைக்கழக சமூகத்தில் அதன் செல்வாக்கு ஆகியவற்றை ஆவணப்படுத்தும் நூல் வெளியீடு இடம்பெற்றது.

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கத்தோலிக்க மாணவர் ஒன்றியமும், நல்லாயன் ஆன்மீகப் பணியகம்: ஐம்பது ஆண்டுகளின் மீள்பார்வை” எனும் தலைப்பில் பேராசிரியர் அருட்தந்தை போல் றொகான் தொகுத்துள்ள இந்நூல் கத்தோலிக்க மாணவர் ஒன்றியத்தின் நீண்ட பயணத்தின் முக்கிய கட்டங்களை உள்ளடக்கியுள்ளது.

தொடர்ந்து கத்தோலிக்க மாணவர் ஒன்றிய வளர்ச்சிக்கும் அதனை நல்லாயன் ஆன்மீகப் பணியகமாக மாற்றுவதற்கும் முக்கிய பங்காற்றிய மறைந்த திரு. அந்திரேஸ்பிள்ளை விமலதாசன் அவர்களுக்கான அஞ்சலி நினைவுரையை அருட்தந்தை ஜெராட் சவிரிமுத்து அவர்கள் ஆற்றினார்.

அஞ்சலி நிகழ்வை தொடர்ந்து, கத்தோலிக்க மாணவர் ஒன்றியத்தின் ஐம்பதாண்டு கால வரலாற்றை வெளிப்படுத்தும் கண்காட்சி இடம்பெற்றது.

கத்தோலிக்க மாணவர் ஒன்றியப் பயணத்தின் முக்கிய மைல்கற்களை எடுத்துரைக்கும் புகைப்படங்கள், ஆவணங்கள் மற்றும் மறக்கமுடியாத நினைவுப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்நிகழ்வுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் கல்விச் சமூகத்தினர், தற்போதைய மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் அனைத்துச் சமயத் தலைவர்கள், கலந்துகொண்டனர்.

By admin