நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட குருக்கள் ஒன்றியம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

புதிய மாற்றத்தை வேண்டி எனும் தலைப்பில் 1ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள இவ்ஊடக அறிக்கையில், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னணியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், தமிழ் மக்கள் மத்தியில் பெருமாற்றத்திற்கான எதிர்பார்ப்புகளை தூண்டியிருக்கும் வரலாற்று பின்புலத்தை குறிப்பிட்டு நாம் ஓர் இனமாக வரலாற்றுப் பெரும் பாய்ச்சல் ஒன்றை மேற்கொள்ளவேண்டிய தருணத்தில் நிற்கிறோமென சுட்டிக்காட்டியுள்ளது.

‘அனுர’ எனும் அலையைத் தொடர்ந்து ‘மாற்றம்’ மந்திரச்சொல்லாக பலராலும் உச்சரிக்கப்படும் இவ்வேளையில் தமிழ்மக்கள் புதிய வியூகங்களை வகுத்து வரலாற்று சறுக்கலை மீண்டும் ஒருமுறை நிகழவிடாது தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து எதிர்கால அரசியலுக்கான புதிய திசைகளை தீர்மானிக்கும் தருணம் உருவாகியுள்ளதையும் இவ்வறிக்கை கோடிட்டுக்காட்டியுள்ளது.

அத்துடன் பாரம்பரிய அரசியல் பிரதிநிதிகள் புதிய அரசியல் போக்குக்கு இடம்விட்டு, எம்மிடையே இருக்கும் பிளவுகள், வேற்றுமைகள், சாதி, சமய, பிரதேசவாதங்களை கடந்து அர்ப்பணிப்புள்ள நேர்மையான ஊழலற்ற இளையோர்களை உள்வாங்கி வழிநடத்துவது பாரிய மாற்றம் ஒன்றிற்கான சிறந்த வழியாக அமையும் என்பதையும் இவ்வறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் தமிழ் அரசியல் தலைமைகளின் அரசியல் சித்தாந்தம் மையரோட்டு அரசியலை தாண்டி கிராமமட்ட சமூக அமைப்புக்களைநாடி புதிய வேட்பாளர்களை தெரிந்தெடுப்பதாக அமைவதும் இம்மாற்றத்திற்கு வழிகோலுமெனவும் இவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

By admin