யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியின் 2024,25ஆம் கல்வியாண்டு அங்குரார்ப்பண நிகழ்வு 01ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இத்திருப்பலியில் அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்கள் விரிவுரையாளர்களுடன் இணைந்து நம்பிக்கை அறிக்கையை புதுப்பிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. திருப்பலியை தொடர்ந்து அன்றைய நாளுக்கான அரங்க நிகழ்வுகள் குருத்துவக்கல்லூரியின் அருட்தந்தை ஜோய் கிறிசோஸ்திரம் கேட்போர்கூடத்தில் நடைபெற்றன.

இந்நிகழ்வில் கடந்த கல்வியாண்டில் சிறப்பு சித்திபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் நடப்பாண்டிற்கான ஆரம்ப விரிவுரையும் இடம்பெற்றது. ஆரம்ப விரிவுரையை ‘யாழ். மறைமாவட்ட ஜந்தாவது ஆயர் பேரருட்தந்தை ஹென்றி யுலைன் அவர்களின் பணியும் சாதனைகளும்’ என்னும் தலைப்பில் குருத்துவக் கல்லூரியின் விரிவுரையாளர் அருட்தந்தை யஸ்ரின் அவர்கள் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் குருக்கள், துறவிகள், அருட்சகோதரிகள், அருட்சகோதர்கள் கலந்து சிறப்பித்தனர்.

By admin