யாழ். மறைமாவட்ட ஆயருடனான, மறைமாவட்ட குருக்கள் மன்ற கூட்டம், கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் யாழ். மறைமாவட்ட பங்குகள் ரீதியாக சுற்றுச்சூழல் பராமரிப்பு குழுமங்கள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் ஆசிய ஆயர் பேரவையின் காலநிலை மாற்றத்திற்கான அவையத்தின் ஏற்பாட்டில் இயற்கை அனர்த்தங்களை கட்டுப்படுத்தி காலநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் சிறு குழுமங்களை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் கடந்த ஏப்ரல் மாதம் பிலிப்பைன்ஸ் நாட்டின் தகாய்தே நகரில் நடைபெற்ற மாநாட்டின் அனுபவங்களோடு தற்போது நிலவும் காலநிலை மாற்றம் அதற்கான காரணிகள் தொடர்பாக யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களால் தெளிவூட்டல் உரை வழங்கப்பட்டது.
தொடர்ந்து மறைமாவட்ட பங்குகள் ரீதியாக சுற்றுச்சூழல் பராமரிப்பு குழுமங்கள் உருவாக்குவதன் அவசியம் உணரப்பட்டு, இச்செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த குருமுதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டதுடன் இக்குழுவினர் பங்குகளை தரிசித்து சுற்றுச்சூழல் பராமரிப்பின் அவசியத்தை பங்குமக்களுக்கு உணர்த்தி பங்குரீதியாக சிறு குழுமங்களை அமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.