நீதிக்கும் சமாதானத்துக்குமான குருக்கள் துறவியர் ஒன்றியம் வருகின்ற 21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் பொது வேட்பாளரும் ஜனாதிபதி தேர்தலும் எனும் தலைப்பில் ஊடக அறிக்கையொன்றை 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
இவ்வறிக்கையில் ஜனாதிபதி தேர்தல் அல்லது ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய அரசியல் அறிவு, அவர்களது தனி- கூட்டு அரசியல் இறந்தகால வரலாற்றுடன்தான் எம் தெரிவாக முன்வைக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு இத்தேர்தலும் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு சட்டகத்திற்குள் இருந்துகொண்டு நடாத்தப்படுகின்ற உண்மையையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் தற்போதுள்ள தேர்தல் முறைமை எண்களை அடிப்படையாக கொண்டு வாக்குகளின் எண்ணிக்கையை மையப்படுத்திய தெரிவாக அமைந்துள்ளமையால் இத்தேர்தலில் ஈழத்தமிழ் மக்களுடையதும் ஏனைய சிறுபான்மை இனக்குழுக்களினதும் வாக்குகள் செல்வாக்கு செலுத்துவது வரையறுக்கப்பட்டுள்ளதை இவ்வறிக்கையில் கோடிட்டுக்காட்டி காட்டியுள்ளனர்.
அத்துடன் தெற்கிலிருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிங்கள பௌத்த தேசியத்தின் மேலாண்மையை வலியுறுத்தியே பிரச்சார மேடைகளை அலங்கரிக்கின்றார்கள். ஈழத்தமிழ் மக்களுடைய கூட்டு அரசியல் வேணாவாவையும் தமிழின அழிப்பையும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற அரசியல் கோட்பாட்டுச் சூழலில் தெற்கில் இருக்கும் சனாதிபதி வேட்பாளர்கள் ஒன்றுபட்டிருக்கின்றார்கள். தமிழர் தாயகம் தொடர்ந்து ஈழ தமிழ்த்தேசிய நீக்கத்துக்குள் வலிந்து தள்ளப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.
சிங்கள பௌத்த – மயமாக்கல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. ஒட்டுமொத்தத்தில் ஈழத்தமிழர் இருப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கின்றது. இவ்வாறான அரசியல் சூழமைவில் அரசியல் அறத் தெரிவாக தமிழ் பொது வேட்பாளர் ஈழத்தமிழ் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக நமக்குமுன் நிறுத்தப்பட்டுள்ளார்.
இம்முக்கியமான காலகட்டத்தில் தமிழ் மக்களின் தெரிவு, ஈழத்தமிழரின் அரசியல் வேணவாவை வலுப்படுத்தும் என்பது எமது ஆழமான நம்பிக்கையென இவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.