கிளறேசியன் துறவற சபை ஆரம்பிக்கப்பட்டதன் 175வது ஆண்டு சிறப்பு நிகழ்வு கடந்த மாதம் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நீர்கொழும்பு கட்டுவ பிரதேசத்திலுள்ள கிளறேசியன் சிறிய குருமடத்தில் நடைபெற்றது.

திருத்தந்தையின் இலங்கைக்கான பிரதிநிதி பேரருட்தந்தை பிராயன் உடக்குவே அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து 17ஆம் திகதி புதன்கிழமை கிளறேசிய குடும்ப தின நிகழ்வும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் இலங்கையின் பல இடங்களிலும் பணியாற்றும் கிளறேசிய சபை இருபால் துறவிகள் கிளறேசிய பொதுநிலையினரென பலரும் கலந்துகொண்டதுடன் கிளறேசிய இறையியல் குருமட மாணவர்களின் தயாரிப்பில் உருவான இரண்டு கிறிஸ்தவ பாடல்களும் வெளியிடப்பட்டன.

அத்துடன் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு ஸ்பெயின் நாட்டில் சபை ஆரம்பிக்கப்பட்ட இடமாகிய விக் (vic) நகரில் சபையின் உலகத் தலைவர் அருட்தந்தை மத்தியு வட்டமட்டம் அவர்களின் தலைமையில் அன்றைய தினம் நடைபெற்றது.

கிளறேசிய சபை கர்தினால் அக்குலினோ போகோஸ் தலைமை தாங்கி திருப்பலி ஒப்புக்கொடுத்ததுடன் இந்நிகழ்வில் கிளறேசியன் சபை ஆலோசகர்கள், 72 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண தலைவர்களும் கலந்துகொண்டனர்.

By admin