யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதன் 175ஆவது ஆண்டு அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரிக் கொடியேற்றப்பட்டு புனித பத்திரியார் சிலைக்கு மாலையணிவிக்கப்பட்டு கல்லூரிக்கொடி ட்றோன் வானூர்தியில் பறக்கவிடப்பட்டு பாடசாலைக்கீதம் இசைக்கப்பட்டு பற்றீசியன் நடை பவனி ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இப்பவனி புனித பத்திரிசியார் வீதியில் ஆரம்பமாகி யாழ் பிரதான வீதியூடாக பஸ்ரியன் சந்தியை வந்தடைந்து யாழ் வைத்தியசாலை வீதியூடாக நகரத்தின் மையமான மணிக்கூட்டுக் கோபுர வீதியின்வழி யாழ். பொது நூலகத்திற்கு சென்றடைந்தது. அங்கு அருட்தந்தை லோங் அவர்களின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ட்றோன் மூலமாக மலர் தூவப்பட்டது.
அருட்தந்தை லோங் அவர்களின் சிலைக்கு அமலமரிதியாகிகள் சபை மூத்த குருவாகிய அருட்தந்தை லூயிஸ் பொன்னையா அவர்கள் மாலை அனிவித்தார். தொடர்ந்து இப்பவனி யாழ் பிரதான வீதியூடாக மடத்தடி சந்தியை வந்தடைந்தது. அங்கு தமிழ்த்தூது தனிநாயகம் அவர்களின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அங்கிருந்து இப்பவனி கல்லூரியை சென்றடைந்து.
பாடசாலை மாணவர்களின் Band அணிவகுப்புக்கள் இல்லக்கொடிகள் தாங்கிய அணிவகுப்புக்கள், விளையாட்டு அணிகள் கலாச்சார ஊர்திகள், இன்னியம், மேலைத்தோய கீழைத்தேய இசை குழுக்களின் ஊர்திகள், சாரணர், கடேற், சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ், வெளிநாட்டு கிளைகளின் கொடிகளுடன் இணைந்த பழைய மாணவர்கள், கோலட்டம், கும்மி, கரகாட்டம், காவடி, ஒயிலாட்டம் போன்ற கலாசார குழுக்கள் போன்றவற்றுடன் இணைந்த இம்மாபெரும் பேரணியில் மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகளென 3500ற்கும் அதிகமானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
பவனியின் இறுதியில் அதிபர் அவர்களின் தலைமையில் கல்லூரிவளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயரும் கல்லூரி முகாமையாளருமான பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து யூபிலி ஆண்டு சிறப்பு மலரை வெளியீடு செய்து 175ஆம் யூபில் ஆண்டை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.
‘தொற்றா நோய்க்கான விழிப்புணர்வு’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கபட்ட இந்நடை பவனியில் இறுதியில் பழையமாணவர்களின் ஒருவருட அணியினர் பவனி சென்ற வீதியை துப்பரவு செய்யும் பணியிலும் ஈடுபட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
