சைவசமய மக்களின் புனித நாளாகிய சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோவிலில் வழிபாடுகளுக்கு ஆயத்தம் செய்துகொண்டிருந்த பூசகர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் வழிபாடுகளுக்கு வந்திருந்து பொதுமக்களுக்கு எதிராக இலங்கை பொலீஸாரினால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை கண்டித்து கண்டனப் போராட்டங்கள் பல இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இங்கு நடைபெற்ற வன்முறையை கண்டித்து யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு கண்டன அறிக்கையொன்றை கடந்த 11ஆம் திகதி திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது.
இவ்வறிக்கையில், அமைதியான முறையில் வழிபாடுகளை நடாத்த நீதிமன்றம் அனுமதியளித்த போதும் இவ்வாறான அரச வன்முறைகள் அரங்கேறுவது முறையானதல்ல என சுட்டிக்காட்டி இது போன்ற செயற்பாடுகளால் மத நல்லிணக்கம் எட்டாக்கனியாகவே உள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் இது போன்ற அடாவடித்தனமான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த ஆட்சியாளர்கள் அர்ப்பணிப்புடன் முன்வராவிட்டால் உண்மையான மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாதெனவும் இவ்வறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது