15.மே ,2018. வானத்தை அண்ணாந்து நோக்குவதையும், உடனடியாக, இவ்வுலகை நோக்கி நம் பார்வையைத் திருப்பி, இயேசு நம்மிடம் ஒப்படைத்துச் சென்றுள்ள பணிகளை ஏற்று நடத்த முன்வருவதையும், இயேசுவின் விண்ணேற்ற விழா நமக்கு நினைவூட்டுகின்றது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவின் விண்ணேற்ற விழாவையொட்டி, தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளுக்கு அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், படிப்பறிவில்லாத ஒரு சிறு கூட்டத்தை நோக்கி, இயேசு, ‘உலகெல்லாம் சென்று நற்செய்தியை அறிவியுங்கள்’ எனக் கூறியது, மக்களின் பலத்தை மட்டும் நம்பியல்ல, மாறாக, தூய ஆவியாரின் அருள்பொழிவையும் இணைத்தே என்று கூறினார்.
இயேசுவின் அன்பையும் இரக்கத்தையும் உலகின் அனைத்து மூலைகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டிய சீடர்களின் பணி, பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரும், நற்செய்தியை அறிவிக்க வேண்டிய கடமையைக் கொண்டுள்ளனர் என்று எடுத்துரைத்தார்.
இயேசுவின் விண்ணேற்றத்தின், மனிதர்களாக நாம் வாழ்வது என்பது, உலகின் இறுதி எல்லைவரை அவரின் நற்செய்தியை எடுத்துச் செல்வதாகும் என்று கூறியத் திருத்தந்தை, அவ்வாறு செல்லும் வழியில் ஏழைகளின் உருவில் இயேசுவே நம்மை எதிர்கொள்கிறார், அவரை அடையாளம் கண்டு, நம்பிக்கையின் உயிரூட்டமுடைய சான்றுகளாக நாம் விளங்கவேன்டும் என்றார்.
தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில், இஞ்ஞாயிறன்று உலக சமூகத்தொடர்பு நாள் சிறப்பிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, போலிச் செய்திகளைப் புறந்தள்ளி, அமைதியின் செய்தியாளர்களாக, சமூகத் தொடர்பாளர்களாகச் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அன்னை தினத்தையும் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை, அனைத்து அன்னையருக்கும் நன்றியுரைப்பதோடு, அவர்களுக்காக கரவொலி எழுப்பி, பாராட்டு தெரிவிப்போம் எனவும் கேட்டுக்கொண்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி