போர்டோவின் திருக்குடும்ப சபையின் வரலாற்றை வெளிப்படுத்தும் நோக்கில் திருக்குடும்ப சபை அங்கத்தவர்களால் முன்னெடுக்கப்பட்ட “வந்து பாருங்கள்” வரலாற்று கண்காட்சி 29ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். திருக்குடும்ப பாலர் பாடசாலையில் நடைபெற்றது.
சபைக் கிளைகளான அப்போஸ்தலிக்க துறவிகள், தியானயோக துறவிகள், திருமட சார்பற்ற சகோதரிகள், துணைக்குருக்கள் மற்றும் திருக்குடும்ப பொதுநிலையினர் இணைந்து முன்னெடுத்த இக்கண்காட்சியில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து இக்கண்காட்சியை ஆரம்பித்துவைத்தார்.
இக்கண்காட்சியில் திருக்குடும்ப வரலாறு, சபை ஸ்தாபகர் வணக்கத்துக்குரிய பியர் பியன்வெனு நோஆய் அவர்கள் இருந்த இடமான பிரான்ஸ் நாட்டின் மாட்டியாக், சபை அங்கத்தவர்களால் எழுதப்பட்ட புத்தகங்கள், ஆரம்பகால அருட்சகோதரிகளின் படங்கள், அவர்களால் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், அருட்சகோதரிகளின் பணிகள், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், தொடக்கநிலை சகோதரிகள் பற்றிய விளக்கங்கள், சபைக்கு கிடைத்த நற்கருணை ஆசீர்வாத காட்சிகள், சபை கிளைகளின் பணிகள் போன்றவை கிளை அங்கத்தவர்களால் காட்சிப்படுத்தப்பட்டன.
இக்கண்காட்சியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.