யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் 04ஆம் திகதி சனிக்கிழமை யாழ். டேவிட் வீதியில் அமைந்துள்ள கலைத்தூது அழகியல் கல்லூரியில் நடைபெற்றது.
பேரவையின் புதிய தலைவராக வணக்கத்துக்குரிய கிருபானந்த குருக்களும் இணைத்தலைவர்களாக யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், நாகவிகாரை விகாராதிபதி ஸ்ரீ விமலதேரர், மௌலவி ஏ. எம். றழீம் ஆகியோரும் செயலாளராக அருட்பணி இந்திரதாஸ் ராஜகுமாரும் உப செயலாளராக வணக்கத்துக்குரிய கனகலிங்கம் ராஜாவும் பொருளாளராக கோப்பாய் கல்வியற் கல்லூரியின் விரிவுரையாளர் திருமதி ஜானகி தர்மஜீலனும் நிர்வாக சபை உறுப்பினர்களாக மௌலவி சுப்யான், திரு. லயன் ரஞ்சன், அருட்பணி செல்வன், திருமதி. சிரோமி ஆகியோரும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர். தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம், இளையோர் போதைவஸ்து பாவனை, அதிகரித்துவரும் தற்கொலைகள் போன்றவற்றை கட்டுப்படுத்துதல், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைமுறையில் இருக்கும் தனியார் கல்வி நிலைய வகுப்புகளுக்கான தடையினை 100 வீதம் நடைமுறைப்படுத்துவதற்கு உதவுதல், சட்டவிரோத பிரமிட் வலையமைப்பு வியாபாரத்தினை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளல் மற்றும் தொலைபேசிகளின் ஊடான நுண்முறை பண மோசடிகளுக்கு எதிரான விழிப்புணர்வுகளையும் மேற்கொள்ளல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.