யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் சபையினரின் உயர் மாநாடு மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்களின் தலைமையில் 16 ஆம் திகதி தொடக்கம் 19ஆம் திகதி வரை மன்னார் ‘ஞானோதயம்’ அமலமரித்தியாகிகள் இல்லத்தில் நடைபெற்றது.
அமலமரித்தியாகிகளின் வாழ்வையும் பல்வேறுபட்ட பணிகளையும் சிந்தித்து எதிர்காலப் பணிகளை திட்டமிடும் செயலமர்வாக முன்னெடுக்கப்பட்ட இம்மாநாட்டின் ஆரம்பநாள் நிகழ்வுகளில் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு, கொடிகள் ஏற்றப்பட்டு மாநாட்டு கீதம் இசைக்கப்பட்டு அறிமுக உரைகளுடன் நற்கருணை ஆராதனை இடம்பெற்றது.
இந்நிகழ்வில், மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்ணான்டோ, யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம், அநுராதபுர மறைமாவட்ட ஆயர் அமலமரித்தியாகிகள் சபை பேரருட்தந்தை நோபேட் அன்றாடி, யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
தொடர்ந்து இரண்டாம் நாள் நிகழ்வுகளில் அமல மரித்தியாகிகளின் உருவாக்கம் அவர்களின் பணி பற்றிய கலந்துரையாடல், அனுபவ பகிர்வுகள் என்பன இடம்பெற்றதுடன் அமலமரித்தியாகிகளின் சட்டமும் ஒழுங்கும் திரு அவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 199ஆம் ஆண்டு நிறைவை சிறப்பித்து கொழும்பு மாகாண முதல்வர் அருட்தந்தை றொசான் சில்வா அவர்களால் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மூன்றாம் நாள் நிகழ்வுகளில் மாகாண நிதி மற்றும் நிர்வாக அமைப்புக்கள், எதிர்கால திட்டங்கள்; தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்று அவை தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டு சட்டம் இயற்றுவதற்கான ஆலோசனைகள் முன்மொழியப்பட்டு அவைகள் மாகாண தலைவரிடம் கையளிக்கப்பட்டன.
ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை முன்னெடுக்கப்படும் இவ்உயர் மாநாடு இவ்வருடம் 2025ஆம் யூபிலி ஆண்டில் இயேசு சபை அருட்தந்தை ஜெயராஜ் இராசையா அவர்களின் வழிநடத்தலில் நடைபெற்றது.
இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் 85க்கும் அதிகமான யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் பங்குபற்றியிருந்த இம்மாநாடு இவர்களின் வாழ்விலும் பணியிலும் புதிய பார்வையுடன் கூடிய உத்வேகத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்த வழிகோலியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.