யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமையம் ஆரம்பிக்கப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு 28ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை மறைநதி கத்தோலிக்க ஊடகமையத்தில் நடைபெற்றது.
மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் Speed IT Net நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட கத்தோலிக்க ஊடகமையத்திற்கான கையடக்க தொலைபேசி (அன்றொயிட்) செயலி யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இச்செயலிக்குரிய செயற்பாட்டு விளக்கத்தை Speed IT Net நிறுவன முகாமையாளர் திரு. தவறூபன் வழங்கினார். தொடர்ந்து WhatsApp சமூகவலைத்தள செயலியூடாக இவ்வருடம் முன்னெடுக்கப்பட்ட பசாம் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்களும், மறை அலை தொலைக்காட்சியில் வாராந்தம் ஒளிபரப்பப்படும் வினா விடை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் உதயன் பத்திரிகை செய்தி ஆசிரியர் திரு. பிரபாகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொதுமக்கள்னெ பலரும் கலந்து சிறப்பித்தனர்.