யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய ஆச்சேஸ் விழா கடந்த 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.
மரியாயின் சேனை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் சேனையினர் தங்களின் கொடிகளை கைகளில் ஏந்தி யூபிலி பாடல் இசைத்துக்கொண்டு புனித கதவின் ஊடாக பேராலயத்திற்குள் பவனியாக வருகைதந்தனர்.
தொடர்ந்து செபமாலை தியானமும் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜீவா போல் அவர்களால் மரியாவின் ஆன்மீகம் என்னும் தலைப்பில் கருத்துரையும் வழங்கப்பட்டது.
கருத்துரை நிறைவில் சேனை அங்கத்தவர்களின் அர்ப்பண நிகழ்வும் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் சிறப்புத்திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் 1500இற்கும் அதிகமான மரியாயின் சேனை அங்கத்தவர்கள் கலந்து தமது வாக்குறுதிகளை புதுப்பித்தனர்.