யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் குருத்துவ பொன்விழா நிகழ்வு கடந்த 24ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நன்றி திருப்பலியும் தொடர்ந்து பேராலய திறந்த வெளியரங்கில் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
நிகழ்வின் ஆரம்பத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் புனித மடுத்தீனார் சிறிய குருமட முன்றலிலிருந்து திறந்த வாகானத்தில் பாண்ட் வாத்தியங்களுடன் பேராலயத்திற்கு அழைத்து வரப்பட்டார்.தொடர்ந்து ஆயர் அவர்களின் தலைமையில் மரியன்னை பேராலயத்தில் நன்றி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இத்திருப்பலியில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ, கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம், அருட்தந்தை மொன்சிஞ்ஞோர் கமிலஸ் நிமலன், யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் ஆகியோர் இணைந்துகொண்டனர். திருப்பலியை தொடர்ந்து கலை நிகழ்வுகள் பேராலய திறந்தவெளி அரங்கில் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் வழிநடத்தலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ், சமய தலைவர்கள், கடற்படை, பொலிஸ் மற்றும்
இராணவ உயர் அதிகாரிகள், ஆயர் அவர்களின் குடும்ப உறவினர்கள், குருக்கள், துறவிகள், இறைமக்களெனப் பலரும் கலந்து கொண்டதுடன் ஆயர் அவர்களின் குருத்துவ யூபிலிதினத்தை நினைவுகூர்ந்து, யூபிலி மலரும் வெளியிடப்பட்டது.