யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையமும் கத்தோலிக்க ஆசிரியர் சங்கமும் இணைந்து முன்னெடுத்த யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் பெயர்கொண்ட விழா 07ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் ஆரம்பத்தில் ஆயர் அவர்கள் ஆயர் இல்லத்திலிருந்து பான்ட் வாத்தியங்களோடு பாடசாலை மாணவர்களால் புனித மரியன்னை பேராலயத்துக்கு அழைத்துவரப்பட்டார். தொடர்ந்து ஆயர் தலைமையில் பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருப்பலி நிறைவில் ஆயருக்கான கௌரவிப்பு இடம்பெற்றதுடன் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற கத்தோலிக்க திருமறைத்தேர்வில் சிறப்புச்சித்தி பெற்ற 37 மாணவர்களுக்கான பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.