மீட்பராம் இயேசுக்கிறிஸ்துவின் வருகைக்கு எம்மைத் தயார்படுத்தும் இப்புனித காலத்தில் ஆன்மீகப் புதுப்பித்தலோடு, திருஅவையுடன் இணைந்து நம்பிக்கையின் திருப்பயணிகளாக பயணிக்க ஒன்றிணைவோமென யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் வெளியிட்டுள்ள திருவருகைக்கால சுற்றுமடலில் அழைப்பு விடுத்துள்ளார்.

‘‘நம்பிக்கையின் திருப்பயணிகள்” எனும் கருப்பொருளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்ட 2025 யூபிலி ஆண்டின் நுழைவாயிலாக இத்திருவருகைக்காலம் அமைவது ஓர் சிறப்பான விடயமென சுட்டிக்காட்டியுள்ள ஆயர் அவர்கள் இயேசுக்கிறிஸ்துவின் பிறப்பில் இறைத்தந்தை தம்முடைய அளவற்ற அன்பையும் மனத்தாழ்மையையும் வெளிப்படுத்துகிறாரெனவும் இயேசு பாலன் தீவனத்தொட்டியில் பிறந்ததன் வழியாக தம்மை ஏழை எளிய மக்களுடன் அடையாளப்படுத்தியது போன்று எம்மையும் தேவையில் உள்ளோருடன் பகிரந்து வாழ அழைப்பு விடுக்கின்றாரெனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இறைமக்கள் ஒவ்வொருவரும் கிறிஸ்துபிறப்பு விழாவைக் கொண்டாட்டங்களுடன் மாத்திரம் சுருக்கி விடாது நற்செயல்கள் மூலம் இக்காலத்தை பிறரன்புப் காலமாக மாற்றியமைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ள ஆயர் அவர்கள் யூபிலி ஆண்டில் பரிபூரண பலனை அடைய மறைமாவட்டத்தில் உள்ள திருத்தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன் நடந்தேறிய இரு தேர்தல்களிலும் மாற்றம் வேண்டிய ஓர் அரசியலை எதிர்பார்த்து மக்கள் புதியதொரு அரசாங்கத்தை பல எதிர்பார்ப்புக்களுடன் தெரிவு செய்துள்ளநிலையில் மக்களின் எதிர்பார்ப்பை புதிய அரசாங்கம் கருத்திற்கொண்டு செயற்படுவதன் வழியாக, எமது மண்ணில் நிலையான அமைதியும், பொருளாதார மேம்பாடும் செழித்தோங்க, பிறக்கவிருக்கும் பாலக, இயேசு அருள்கூர வேண்டுமென இச்சுற்றுமடலில் தெரிவித்துள்ளார்.

By admin