யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியில் புதிய கல்வியாண்டின் ஆரம்ப நிகழ்வும் புனித சவேரியார் இறையியல் நிறுவக அங்குரார்ப்பண நிகழ்வும் 02ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றன. கல்லூரியின் அதிபர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து திருப்பலியை தலைமை தாங்கி ஒப்புக் கொடுத்தார்.
தொடர்ந்து அன்றைய நாளுக்கான அரங்கநிகழ்வுகள் அங்கு இடம்பெற்றன. இந்நிகழ்வில் உரோமாபுரி ஊர்பானியானா பல்கலைக்கழக பணிப்புரையின்கீழ் கல்விச் செயற்பாடுகளுக்காக மட்டும் தனித்துவமாக்கப்பட்டுள்ள “புனித சவேரியார் இறையியல் நிறுவகத்தை” யாழ் மறைமாவட்டக் குருமுதல்வரும் நிறுவக இயக்குனருமாகிய அருட்தந்தை ஜெபரெட்ணம் அவர்கள் அறிமுகம் செய்து ஆரம்பித்துவைத்தார்.
தொடர்ந்து கடந்த கல்வியாண்டில் சிறந்த முறையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் நடப்பாண்டிற்கான ஆரம்ப விரிவுரையை குருத்துவக்கல்லூரியின் விரிவுரையாளர் அருட்தந்தை குயின்சன் பெர்ணான்டோ அவர்கள் “ஒருங்கிணைந்த சூழமைவியல்” என்னும் தலைப்பில் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் குருக்கள், துறவிகள் , அருட்சகோதரிகள், அருட்சகோதர்கள் கலந்து சிறப்பித்தனர்.