மாதகல் சென். தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலையின் 143 ஆம் ஆண்டு நிறைவுவிழா மற்றும் புதிய கட்டடத்திறப்புவிழா என்பன பாடசாலை அதிபர் திருமதி றமணி அவர்களின் தலைமையில் 18ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இந்நிறைவு விழாவின் முன்னேற்பாடாக இம்மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை எழுச்சிவார நிகழ்வுகள் அங்கு நடைபெற்றதுடன் 18ஆம் திகதி மாலை நிறைவுவிழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் அரச அதிபர் வடமாகாண கல்விப்பணிப்பாளர் சிறப்பு விருந்தினர்களாகவும் வலிகாமம் கல்விப்பணிப்பாளர் கட்டட திணைக்கள பொறியியலாளர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவை சிறப்பிக்கும் முகமாக நினைவுமலர் வெளியீடு இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு, கல்வி அபிவிருத்தி நிதிய ஆரம்பித்தல் நிகழ்வு, ஆசிரியர்கள் விருந்தினர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு கலைநிகழ்வுகள் என்பன நடைபெற்றன.
இந்நிகழ்வில் கல்விசார் அதிகாரிகள், ஆசிரியர்கள், திணைக்களம்சார் பொறுப்பதிகாரிகள், மதம்சார் பெரியோர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், வெளிநாட்டு பிரமுகர்கள் மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.