மல்லாகம் புனித சதாசகாய அன்னை யாத்திரைத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். 18ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 24ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. நற்கருணைவிழா திருப்பலியை புனித பத்திரிசியார் கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருவிழா திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் நடைபெற்றதுடன் தொடர்ந்து அன்றைய நாளை சிறப்பிக்கும் முகமாக இரத்ததானம் வழங்கும் நிகழ்வும் அங்கு இடம்பெற்றது. பங்குத்தந்தையின் வழிநடத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் 67 குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.
மல்லாகம் பிரதேசத்தில் 1958ல் ஒரு சில குடும்பங்கள் இணைந்து அன்னைக்கு சிறிய ஒரு கொட்டில் கோயில் அமைத்து செபமாலை செபித்து அன்னைக்கான பக்தி முயற்சியை ஆரம்பித்தனர். காலப்போக்கில் கொட்டில் கோயில் சிறிய கட்டிடமாக மாறி பின்னர் 2005ஆம் ஆண்டு ஆரம்பத்தில் புதிய ஆலயத்திற்கான அத்திவாரம் நாட்டப்பட்டு 2016ஆம் ஆண்டு புதிய ஆலய கட்டுமான பணிகள் நிறைவடைந்து அழகிய தோற்றம் கொண்ட புதிய ஆலயம் திறந்துவைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.