வடக்கு கிழக்கு ஆயர் மன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வடக்கு கிழக்கு மறைமாவட்டங்களை சேர்ந்த மறையாசிரியர்களுக்கான ஒருமாத கால வதிவிடப்பயிற்சி நிறைவுநாள் நிகழ்வு 03ஆம் திகதி சனிக்கிமை இன்று மன்னார் மடுத்திருத்தல தியான மண்டபத்தில் நடைபெற்றது.
வதிவிடப்பயிற்சி இணைப்பாளரும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வருமான அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்கள் பிரதமவிருந்தினராக கலந்துகொண்டார்.
திருகோணமலை மறைமாவட்ட ஆயர் அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து அரங்க நிகழ்வுகளும் இடம்பெற்றன. அரங்க நிகழ்வுகளில் பயிற்சியை நிறைவுசெய்த மறையாசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கல், மறையாசிரியர்களின் அனுபவ பகிர்வு, கலைநிகழ்வுகள் மற்றும் சிறப்புரைகள் என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், மன்னார், யாழ்ப்பானம், திருகோணமலை, மட்டக்களப்பு மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர்கள் மற்றும் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகளென பலரும் கலந்துகொண்டனர்.
மறையாசிரியர்களுக்கான இவ்வதிவிட பயிற்சி உருவாகி உருவாக்குவோம் எனும் கருப்பொருளில் கடந்த மாதம் 06ஆம் திகதி ஆரம்பமாகி இம்மாதம் 03ஆம் திகதி இன்றைய தினம் நிறைவுற்றது.
இவ்வதிவிடப் பயிற்சியில் ஐந்நூல், வரலாற்று நூல்கள், இறைவாக்கினர்கள், புதிய ஏற்பாடு, திருவழிபாடு, கிறிஸ்து இயல், மரியாள் இயல், ஒழுக்க இறையியல், புகுமுக அருட்சாதனங்கள், திருமணம், உலக திருஅவை வரலாறு, இலங்கை திருஅவை வரலாறு, செபமும் ஆன்மீகமும், வத்திக்கான சங்க ஏடு, மறைக்கல்வி போதனா முறை, வளர்ச்சி உளவியல், கத்தோலிக்க திருஅவையின் போதனை, கத்தோலிக்க திருமண ஒழுங்குமுறைகள், மனிதமைய மறைக்கல்வி, தலைமைத்துவம் ஆகிய பாடப்பரப்புக்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இப்பயிற்சிநெறியில் நான்கு தமிழ் மறைமாவட்டங்களை சேர்ந்த 37வரையான மறையாசிரியர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.