திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மரண தண்டனை குறித்து, கத்தோலிக்க மறைக்கல்வி ஏட்டில் செய்துள்ள மாற்றம், விசுவாசத்தின் சாரத்தைத் தெளிவுபடுத்துவதற்கும், மனித மாண்பைப் பாதுகாப்பதற்கும் எடுக்கப்பட்டுள்ள முயற்சியாக உள்ளது என, பேராயர் ரீனோ பிசிகெல்லா (Rino Fisichella) அவர்கள் கூறியுள்ளார்.
கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி ஏடு, எண் 2267ல் மரண தண்டனை குறித்து செய்யப்பட்டுள்ள மாற்றம், இதற்கு முந்தைய திருஅவையின் போதனைகளின் தொடர்ச்சியாக உள்ளது என்று, புதிய வழிகளில் நற்செய்தி அறிவித்தலை ஊக்குவிக்கும் திருப்பீட அவையின் தலைவர், பேராயர் பிசிகெல்லா அவர்கள் கூறியுள்ளார்.
லொசர்வாத்தோரே ரொமானோ எனப்படும் வத்திக்கானின் நாளிதழில், இவ்வாறு தன் கருத்துக்களை எழுதியுள்ள பேராயர் பிசிகெல்லா அவர்கள், இந்த மாற்றத்திற்கென கொடுக்கப்பட்டுள்ள மூன்று காரணங்கள் பற்றியும் விளக்கியுள்ளார்.
கடுமையான குற்றங்கள் புரிந்திருந்தாலும்கூட, ஒருபோதும் இழக்க இயலாத ஒவ்வொரு மனிதரின் மாண்பை அங்கீகரித்தல், இக்காரணங்களில் முக்கியமானது என்றும், கிறிஸ்தவர்களின் விழிப்புணர்வில் நேர்மறையான மாற்றத்தை இது கொணரும் என்றும், கூறியுள்ளார், பேராயர் பிசிகெல்லா.
நாடுகள், தற்போது, தடுப்புக்காவலில் மிகவும் கடுமையான அமைப்புமுறைகளைக் கொண்டிருக்கும்வேளையில், குற்றவாளிகள் மனமாற்றம் அடையவும், மீட்படையும் இந்த மாற்றம் உதவும் எனவும், கருத்து தெரிவித்துள்ளார், பேராயர் பிசிகெல்லா.
இந்த மாற்றம் குறித்த அறிக்கையை, திருப்பீட விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் தலைவர், கர்தினால் Luis Francisco Ladaria அவர்கள், இவ்வியாழனன்று வெளியிட்டார்.
வத்திக்கான் செய்திகள்