மன்னார் மடுத்திருத்தல ஆவணி மாத வருடாந்த திருவிழா 15ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 14ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி பேரருட்தந்தை பிறைன் உடக்குவே அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.
இத்திருவிழாவில் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதுடன் இலங்கை சனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களும் இந்நிகழ்விற்கு வருகைதந்திருந்தார்.

