மன்னார் வங்காலை புனித அன்னாள் ஆலயத்தில் வைத்து இலங்கை அரச படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் 40ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 06ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

அருட்தந்தை சுட்டுக்கொல்லப்பட்ட வங்காலை புனித அன்னாள் ஆலயத்தில் பங்குத்தந்தை அருட்தந்தை லக்கோன்ஸ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ அவர்கள் கலந்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

திருப்பலியை தொடர்ந்து அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அருட்தந்தையுடன் கொல்லப்பட்டவர்களின் நினைவாக சுடரேற்றி அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

தொடர்ந்து அன்றைய நாளை சிறப்பித்து பஸ்ரியன் சமூக முன்னேற்றக் கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்து குருதிக்கொடை வழங்கியிருந்தார்கள்.

யுத்த காலத்தில் தமிழ் மக்களின் உரிமைக்கு குரல் கொடுத்து, கொல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்டு அடக்கம் செய்து, இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டுவந்த வங்காலை புனித அன்னாள் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களை 1985ஆம் ஆண்டு தைமாதம் 06ஆம் திகதி இலங்கை இராணவப்படையினர் வங்காலை புனித அன்னாள் ஆலயத்தில் வைத்து சுட்டு படுகொலை செய்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin