இலங்கை நவீன மற்றும் சமகால கலைக்கான அருங்காட்சியகத்தினால் முன்னெடுக்கப்பட்ட “மக்களின் நிலத்துடனான உறவு” கலைப்படைப்புகளின் காட்சிப்படுத்தல் கடந்த 06ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணம் கண்டி வீதியில் அமைந்துள்ள கலம் பண்பாடுகளின் சந்திப்பு வெளியில் இடம்பெற்றது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிலப்பிரச்சினைகளை மையப்படுத்திய இந்நிகழ்வில் செல்வி ஜாஸ்மின் நிலானி ஜோசப் அவர்களின் கலைப்படைப்புக்களின் காட்சிப்படுத்தலும் படைப்புக்கள் பற்றிய விளக்கவுரையும் தொடர்ந்து இலங்கை திரைப்பட தயாரிப்பாளரான அனோமா ராஜகருணா அவர்களின் “இனி நிலம்” திரைப்படமும் இடம்பெற்றன.
இலங்கையின் பிரதேச சபை காரியாலய காத்திருப்பு அறைகளின் வாங்குத்தொடர்களையும் இவற்றில் காணிகள் குறித்து பதிலே கிடைக்காத சோகக் கதைகளை கொண்ட கோப்புக்கள் குப்பையாக நிரம்பி வழிவதையும் சித்திரங்களாக இக்கலைப்படைப்புக்கள் உருவகப்படுத்துவதுடன் ஒவ்வொரு கோப்பிலுமுள்ள சித்திரங்களும் வவுனியா மற்றும் மன்னாரில் காணப்படும் காணிப்பிரச்சினைகளின் பதிவுகளாக அமைந்துள்ளதுடன் போர்க்கால இடப்பெயர்வுகளுக்கு பின்னர் குடும்ப காணிக்கு உரிமைகோரி பிரதேச சபை காரியாலயங்களில் நிகழ்ந்த நீண்ட நேர காத்திருப்புக்களையும் இவை நினைவுபடுத்துகின்றன.