புனித ஜோசப்வாஸ் திருவிழாவை முன்னிட்டு குருநகர் புனித யோசப்வாஸ் இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கலைவிழா கடந்த 8ஆம் திகதி வியாழக்கிழமை குருநகர் கலையரங்கில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் வழிகாட்டலில் ஒன்றிய தலைவர் செல்வன் விக்ரர் குமார் சுரேன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புனித ஜோசப்வாஸ் திருவிழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பும் பல்கலைகழகத்துக்கு தெரிவான மாணவர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றதுடன் ‘இறை திட்டம் தேடும் இளையோர்’ என்னும் தலைப்பில் வில்லுப்பாட்டும் ‘சமூகத்தில் இளையோர் தூண்களா துன்பங்களா’ என்னும் தலைப்பில் பட்டிமன்றமும், ‘ஊனக்கண்’ என்னும் சமூக நாடகமும் மேடையேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறை விரிவுரையாளர் அருட்தந்தை ரவிச்சந்திரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ்ப்பாணம் இறை தியான இல்ல இயக்குநர் அருட்தந்தை இருதயதாஸ் மற்றும் குருநகர் சுகாதார மேம்பாட்டு அமைய ஆலோசகர் திரு. ஜயாத்துரை சந்திரன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் யாழ். புனித மரியாள் வித்தியாலய அதிபர் திரு. கெனத் மரியன், யாழ். புனித ஜேம்ஸ் மகளிர் பாடசாலை ஓய்வுநிலை அதிபர் திருமதி. யூயின் யூலியஸ், மற்றும் நாவாந்துறை றோ.க. வித்தியாலய ஆசிரியர் திரு. வென்சலோஸ் யூடா சதீஸ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.