பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா வருகின்ற மாதம் 21ஆம், 22ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் இதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் 18ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை பூநகரி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திரு. முரளிதரன் அவர்களின் தலைமையில் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர் மற்றும் பிரதேச கலாசார உத்தியோகத்தரின் ஒழுங்கமைப்பிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் திருவிழாவிற்கான முன்னாயத்தங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி மறைக்கோட்ட குருமுதல்வர் அருட்தந்தை பெனற், திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஹென்றி எரோணியஸ், பூநகரி பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ், பிராந்திய சுகாதார பணிப்பாளர், வேரவில், வலைப்பாடு மீனவ சங்க உறுப்பினர்கள், வேரவில் வைத்தியசாலை வைத்தியர், பிரதேச சபை செயலாளர், கிராம சேவையாளர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஆலய நிர்வாக உறுப்பினர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், பாதுகாப்புப் படையினர், கடற்படையினரென பலரும் கலந்துகொண்டனர்.
வருகின்ற பங்குனி மாதம் 19ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றப்பட்டு 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழாவும், 22ஆம் திகதி சனிக்கிழமை திருவிழாவும் நடைபெறவுள்ளது.
பழமை வாய்ந்ததும், வரலாற்று சிறப்புமிக்கதுமான பாலைதீவு புனித அந்தோனியார் திருத்தலத்திற்கு மண்டைதீவு, குருநகர், அல்லைப்பிட்டி, வலைப்பாடு, பாசையூர், மன்னார், புத்தளம், நீர்கொழும்பு, இரணைதீவு, நாவாந்துறை போன்ற பல்வேறு இடங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து புனிதரின் அருளை பெற்றுச்செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.