நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பாக யாழ். மாவட்ட சர்வமத பேரவை 02ஆம் திகதி கடந்த புதன்கிழமை ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
“வாழ்வை அழிக்கும் ஏமாற்றத்தை நிராகரித்து, வாழ்வை உறுதி செய்யும் நல்மாற்றத்தை நோக்கி” என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில், தமிழ் மக்கள் தமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இயல்பான வாழ்வுரிமையுடன் வெளிப்படுத்த வேண்டுமெனவும், எவ்விதமான ஏமாற்றங்களுக்கோ.
போலித்தனங்களுக்கோ இடங்கொடாது, தங்களின் வாக்களிக்கும் உரிமையை பொறுப்புள்ள கடமையாக நிறைவேற்ற வேண்டுமெனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து சுதந்திரமான வாழ்வுக்கான ஏக்கம் அனைவருடைய இதயங்களிலும் உள்ளதுடன் ஊழலற்ற, ஏற்றத்தாழ்வற்ற, நீதியான சமத்துவமான வாழ்வுக்கான போராட்டம் இன்றும் தொடர்வதை சுட்டிக்காட்டி இன மத மொழி அடிப்படையில் எந்த ஒடுக்குமுறைகளுக்கும் இடமளிக்காது தமிழ் மக்கள் அவர்களுக்கே உரித்தான வரலாற்றுக் கடமையை பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டுமெனவும் இவ் அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழ் கட்சிகள் குறுகிய சுயநல நோக்கிற்காக தமக்குள் பிளவுபட்டு தமிழ் பாராளுமன்ற ஆசனங்கள் குறைய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திவிடாது நமது வரலாற்று படிப்பினைகளை மனதிற்கொண்டு ஒன்றுபட்டு தூரநோக்கும் மக்கள் பணிக்கான அர்ப்பணிப்பும் மிக்க இளைய தலைமுறையை காத்திரமான அரசியல் தலைவர்களாக முன்நகர்த்தி ஆளுமைமிக்க அரசியல் சமூகத்தை உருவாக்க வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளது.