யாழ்ப்பாண தமிழ்ச்சங்கம், யாழ். மறைமாவட்டம் மற்றும் யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் இணைந்து முன்னெடுத்த நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் பிறப்பின் முப்பொன் விழா ஆண்டு அங்குரார்ப்பண நிகழ்வு 13ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை அச்சுவேலியில் நடைபெற்றது.
தமிழ்ச்சங்க இணைத்தலைவர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலை பண்பாட்டு பேரணியும் தொடர்ந்து புனித திரேசா கல்லூரி மண்டபத்தில் அரங்க நிகழ்வுகளும் இடம்பெற்றன.
கலை பண்பாட்டு பேரணி அச்சுவேலி பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகி அச்சுவேலி புனித திரேசா கல்லூரியை சென்றடைந்து.
இப்பேரணியில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலை, இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடம், மானிப்பாய் புனித அன்னாள் பாடசாலை, அச்சுவேலி மகா வித்தியாலயம், அச்சுவேலி புனித திரேசாள் மகளிர் கல்லூரி யாழ். புனித மரியாள் வித்தியாலய ஆகிய பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களின் கலாச்சார நடன அளிக்கைகளுடன் நாதஸ்வர இசை, மற்றும் குதிரையாட்டம் என்பனவும் இடம்பெற்றன.
தொடர்ந்து நடைபெற்ற அரங்க நிகழ்வுகளில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து ஆசிரியுரை வழங்கியதுடன் யாழ்ப்பாண தமிழ்ச்சங்க பெருந்தலைவரும் யாழ். பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியருமான திரு. சண்முகதாஸ் அவர்கள் வாழ்த்துரையும் தமிழ்ச்சங்க தலைவரும் மற்றும் யாழ். பல்கலைக்கழக பின் பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதியுமான பேராசிரியர் திரு. வேல்நம்பி அவர்கள் தொடக்கவுரையும் யாழ். பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் அருட்தந்தை பிலேந்திரன் அவர்கள் சிறப்புரையும் வழங்கினர்.
இந்நிகழ்வுகளில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், சங்க பொதுச்செயலாளர் திரு. சந்திரமௌலீசன் லலீசன், தமிழ்சங்க உறுப்பினர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மற்றும் பொதுமக்களென பலரும் பங்குபற்றியிருந்தனர்.

By admin